புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் 18 மாத சம்பளம் வழங்கப்படாத நிலையில் உள்ளதால், அதனை வழங்குமாறு கோரி இன்றையதினம் (17) கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் பணிபுரியும் 83 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால், அவர்கள் பல இன்னல்களை எதிநோக்குகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை நிறுவன மேலதிகாரிகளிடமும், தொழிலாளர் திணைக்களத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திலும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவிதமான பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சம்பளம் வழங்கப்படாத நிலையில், கடந்த மாதம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் சுணில் ஹந்துநெத்தி, இந்த மாதம் சம்பளம் வழங்கப்படும் என அங்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும், அது நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக நிர்வாகத்துடன் பேசியபோது நியமனத்தை நாள் சம்பள அடிப்படையில் மாற்றி நாளாந்த கூலி அடிப்படையில் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அடிப்படை சம்பள முறைமையில் சம்பளத்தை வழங்கக் கோரியும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் இதை தொடரவிருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply