2025 ஆசிய ரக்பி செவன்ஸ் (Rugby Sevens) தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டித் தொடரில் ஜப்பான், ஹொங்கொங், சீனா மற்றும் போட்டியை நடாத்தும் நாடான இலங்கை உட்பட 24 ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கவுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் ஹெங்சோ நகரில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹொங்கொங் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அந்த சுற்றில் இலங்கை ஆண்கள் அணி நான்காம் இடத்தையும், பெண்கள் அணி 9ஆம் இடத்தையும் பிடித்தன.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி, ஆண்கள் தரவரிசையில் ஹொங்கொங் முன்னிலையில் உள்ளதுடன், ஜப்பான், சீனா, இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம், மலேசியா, கொரியா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த பத்து இடங்களுக்குள் உள்ளன.
இலங்கை ஆண்கள் அணி ‘C’ குழுவில் போட்டியிடுகின்ற நிலையில், சீனா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் அடங்கும்.
இலங்கை விளையாடும் முதல் போட்டி இன்று நண்பகல் 12:40 மணிக்கு உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ளது.
அதன் பிறகு மாலை 5:04 மணிக்கு சிங்கப்பூருடனும், இரவு 9:50 மணிக்கு சீனாவுடனும் போட்டியிடவுள்ளது.
இலங்கை பெண்கள் அணி விளையாடும் முதல் போட்டி முற்பகல் 10:28 மணிக்கு தாய்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது.
இலங்கை ஆண்கள் அணிக்கு கண்டி விளையாட்டுக் கழகத்தின் கவிந்து பெரேரா தலைமை தாங்குகிறார்.
பெண்கள் அணிக்கு ரந்திகா குமுதுமாலி தலைமை தாங்குகிறார்.
இந்தப் போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் ரசிகர்கள் இலவசமாகப் பார்ப்பதற்கு இலங்கை ரக்பி சங்கம் வாய்ப்பளித்துள்ளது.
