போதைப்பொருள் உட்பட வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிக்க கடவுச் சீட்டு செய்து கொடுக்கும் பிரபலங்கள் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச இன்றையதினம் (21) இலத்திரனியல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத்தீவில் மிகச் சமீபத்திய நாட்களாக பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்கின்றனர். பல கொலைகளின் பின்னணிகளும் அம்பலமாகி வருகிறன. இந்த நிலையில் உண்மையான சில குற்றவாளிகள் தப்பிக்கின்றனர்.
அந்தக் குற்றவாளிகள் கொழும்பை விட்டுத் தப்பிக்க கடவுச் சீட்டு செய்து கொடுக்கும் பிரபலங்கள் யார் என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செவ்வந்தி நேபாளத்தில் கைதான பின்னர் தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னையும் தனது குடும்பதையும், தங்கள் கட்சியையும் திட்டமிட்டு ஓரம்கட்டும் வகையில் சில சக்திகள் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
