இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை- சிக்கும் முக்கிய புள்ளிகள்!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இஷாரா செவ்வந்தியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பின்னர் இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஆனந்தன் கைது செய்யப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஆனந்தனின் மாமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் விசாரணைகளில் இன்னும் சிலர் யாழ்ப்பாணத்தில் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கொண்டு சேர்ப்பித்த படகு யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு இஷாரா, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஏ. ஆனந்தனுக்குச் சொந்தமான 400 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் படகு என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தனிடம் நீண்ட நேரம் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட குறித்த படகு, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகின் இயந்திரத்தை காணவில்லை என்றும், குறித்த படகை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க, உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் இன்று வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இஷாரா செவ்வந்தியின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply