போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய தேசியப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்கால சந்ததியினரின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், தேசிய பேரழிவாகவும் மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய தேசியத் தேவை உள்ளது.
இந்த விடயத்தில் எவ்வித விவாதத்திற்கும் இடமில்லை. இந்த தேசியப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்
இதுகுறித்து சமூகத்தில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களையும் இந்த முயற்சிக்கு பங்களிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
