மகளிர் உலகக் கிண்ண தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்றையதினம் (30) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 339 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஜெமிமா ரொட்றிகஸ் (Jemimah Rodrigues) குவித்த ஆட்டம் இழக்காத அபார சதமும் (127), அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் பெற்ற அரைச் சதமும் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன.
இதேவேளையில் நேற்றுமுன்தினம் (29) முதலாவது அரையிறுதிப் போட்டி தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு இடையில் இடம்பெற்றது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் விளையாட முதலில் தகுதிபெற்ற தென் ஆபிரிக்கா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது.
மகளிர் உலகக் கிண்ண தொடரின் 52 ஆண்டுகால வரலாற்றில் (1973 முதல்) முதல் முறையாக, இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் இல்லாமல் ஒரு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்தியா இதற்கு முன்பு 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
எனினும் தென்னாப்பிரிக்க அணி இந்த வாய்ப்பை வென்றது இதுவே முதல் முறைாகும்.
