பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின் அடிப்படையிலேயே மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பாதுகாப்பை நீக்குவது அரசியல் ரீதியான தீர்மானமாக இருந்தால், மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் பொறுப்பு சபாநாயகருக்கு பாராப்படுத்தப்படுகிறது.
ஆகையால் உடனே சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபருக்கு வழங்குவது சபாநாயகரால் பிறப்பிக்க வேண்டும் என்று உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிலைமை குறித்து மதிப்பீடு செய்து, அறிக்கை தயாரிக்கப்படும் என்ற முந்தைய கருத்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கேள்வி எழுப்பியதோடு, இந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், பொது மக்களுக்காக ஆற்ற வேண்டிய சேவைகளை ஆற்றும் போது மக்கள் பிரதிநிதிகளுக்கு எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வது முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
மேலும், தற்போது சவாலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூராட்சி மன்ற கூட்டங்கள் மற்றும் பொது மக்கள் தினங்களை நடத்தத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த கலந்துரையாடலின் போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக ஆகியோருடன் ரஞ்சித் மத்தும பண்டார, ரவி கருணாநாயக்க, ஜே.சி. அலவதுவல, மனோ கணேசன், பழனி திகாம்பரம், சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார், சுஜித் சஞ்சய, திலித் ஜயவீர, ஜகத் விதான உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிகழ்நிலை ஊடாக இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
