ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அதில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆப்கான் நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
6.3 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பில், 20 பேர் உயிரிழந்த நிலையில், 320 பேர் காயமடைந்துள்ளனர்.
சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
