தொடரும் ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செயல்முறையானது தற்போது “குழப்பத்தில் இருந்து அதிக குழப்பத்தை” நோக்கிச் சென்றுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

தற்போதைய பதில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரின் தன்னிச்சையான, சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்தது.

பல்கலைக்கழக நிர்வாக சபையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போதைய பதில் துணைவேந்தரும், பதிவாளரும் இணைந்து புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைக் கோரி செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட்டிருந்தனர்.

இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான நிர்வாகச் செயல்முறை உட்பட கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் தலையீடுகளுக்குப் பின்னால் பதில் துணைவேந்தரே இருப்பதாகப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியிருந்தது.

குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கப்பெறாமையினால் தொழிற்சங்க போராட்டம் தொடர்வதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம் இன்று (3) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் உடனடியான தீர்வுகளை வழங்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர், பேராசிரியர் நாலக கீகியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply