போதைப்பொருள் மோசடியை அகற்றும் வகையில் “நாடே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டம் அனைத்து அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மோசடியை வேரறுக்கும் வகையில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு பொலிஸார் அனைத்து வழிகளிலும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.
அதற்கமைய பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி தேவைப்படுமாயின், குறித்த பாடசாலையின் அதிபர், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
