தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டி பகுதியில் இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
20 மற்றும் 30 வயதுடைய இலங்கையர்களும் 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் இரவு 8:30 மணியளவில் இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பெரிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெற்கு கியோங்சாங் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு மீட்டர் அகலம், மூன்று மீட்டர் நீளம் மற்றும் இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது . குறுகிய திறப்பு மற்றும் ஏணி வழியாக மட்டுமே இந்த நீர் தொட்டியை அணுகக்கூடியதாக இருந்தது.
மேற்பார்வையாளரின் குடும்பத்தினர் இரவு 7:38 மணிக்கு அவர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் பணி சீருடையில் இருந்ததாகவும், மற்ற இருவரும் வழக்கமான உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை விபத்துக்கான சாத்தியத்தை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை என்றாலும், மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றார்களா அல்லது வேறு பணியில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
