இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தகவல்!

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20.1 சதவீத அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டோபரில் மட்டும் 712 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் அனுப்புவது சமீபத்திய காலங்களில் நேர்மறையான போக்கைப் பேணி வருவதாகவும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருவாய் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 2.34 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 5.3 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply