வட மாகாணத்தில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் வௌியேறும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாளை காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 24 மணிநேரம் வரையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வட மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
வடமாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான விடயமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
