மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் போதைப்பொருளுடன் கைதான இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்!

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 05 இலங்கை மீனவர்களையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர்.

இதனால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த ‘அவிஷ்க புத்தா’ எனப்படும் மீனவப் படகை அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதன்போது குறித்த மீனவப் படகில் 355 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், படகில் இருந்த 5 மீனவர்களையும் மாலைத்தீவு பொலிஸார் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் ஆவர்.

இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் பொருட்டு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மற்றும் கடற்படையின் விஷேட குழுவொன்று மாலைத்தீவுக்கு சென்றது.

எனினும் அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மாலைத்தீவு சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply