வவுனியா – கொரவப்பத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.
காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.
அத்துடன் தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
