உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை!

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொருளியல் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த பரீட்சையின் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சில ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஊடகங்களுக்கு பல கருத்துக்களை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுகேகொடையில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும், உயர்தர பொருளியல் வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கொழும்பில் உள்ள மாணவர்கள் போல கிராமப்புறங்களிலுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமைக்கு, இதுபோன்ற வினாத்தாள் கசிவே காரணம் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply