இன்றைய வானிலை அறிக்கை!

“டித்வா” ( Ditwah ) சூறாவளியானது நலிவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 300 km தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது மேலும் நலிவடைந்து வட திசையை நோக்கி நாட்டை விட்டு அப்பால் நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

களுத்துறை தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசக் கூடும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply