நிவாரணப் பணியின் போது ஹெலிகொப்டர் விபத்து- ஆராய விசேட குழு!

வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் ஆராய விமானப்படையின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு இலங்கையில் தற்போது ஏற்பட்ட அனர்த்த நிலைமையில் இலங்கை விமானப்படை ஒரு மகத்தான மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறது.

இதன்போது எதிர்பாராதவிதமாக நேற்று (30) ஒரு சம்பவம் இடம்பெற்றது.

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக ஹெலிகொப்டர் ஈடுபட்டிருந்தது.

இதன்போது வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நடவடிக்கைக்காக ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட வேளையில், ஹெலிகொப்டர் அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சம்பவத்தின் போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.

பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், 41 வயதுடைய பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய பற்றிய மற்றொரு உருக்கமான விடயம் இன்று பதிவாகியுள்ளது.

விமானி நிர்மால் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான முதுமாணி பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளார்.

அவர் நாளை (2) நடைபெறவிருந்த அதற்கான பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ள தயாராக இருந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply