நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 08 பேர் சடலமாக மீட்பு!

குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கியவர்களுள் இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியைச் சேர்ந்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தற்காலிகமாக உடஹேன்தென்ன கிரேஹெட் இலக்கம் 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் லயன் குடியிருப்பைச் சேர்ந்த 13 வீடுகள் முழுமையாக மண்ணில் புதையுண்டுள்ளன.

கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் (02) ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை எனவும், இவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தினால் தமது உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதற்கு இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும், கடந்த இரண்டு நாட்களாக மக்களே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிரதேச செயலகத்தின் ஊடாகச் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply