நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் எந்தவிதமான சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் இன்று (03) முதல் வழமைபோல பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைமை தடைப்பட்ட நாட்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த மக்களின் வசதிக்காக முன்னர் அறிவிக்கப்பட்ட பின்வரும் விசேட ஏற்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முறைமைக் கோளாறு மற்றும் வானிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்ட பரீட்சைகள், பின்வரும் புதிய திகதிகளில் நடைபெறும்:
2025.11.27 அன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் – 2025.12.08 அன்று நடைபெறும்.
2025.11.28 அன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் – 2025.12.09 அன்று நடைபெறும். (இந்தப் பரீட்சைகள், உங்களின் நேரம் ஒதுக்கப்பட்ட ஆவணத்தில் (Booking Document) குறிப்பிடப்பட்டுள்ள அதே நேரத்திலேயே நடைபெறும்.)
மேலும் முறைமை தடை ஏற்பட்ட 2025.11.27, 28 மற்றும் 2025.12.01, 02 ஆகிய தினங்களில் நேர ஒதுக்கீடு செய்திருந்த சேவையாளர்கள், அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அரசாங்கத்தின் எந்தவொரு வேலை நாளிலும் வருகை தந்து தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கோரியுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இனிவரும் காலங்களில் தடையின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
