நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற வானிலையால் ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
