காக்கைதீவு சந்தைக்கு அருகே வீசப்படும் விலங்குகளின் கழிவுகள்- பொதுமக்கள் கேள்வி!

யாழ்ப்பாணம் – காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த வீதியோரத்தில் விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன விசமிகள் சிலரால் கொட்டப்படுவதால் குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பாரிய சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியோரத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு விதமான கழிவுகள் கொட்டப்படுவதால், அங்குள்ள கட்டாக்காலி நாய்கள் மற்றும் பறவைகள் அக்கழிவுகளைத் தூக்கிச் சென்று வெவ்வேறு இடங்களில் பரவச் செய்வதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்களை உண்பதற்காக விலங்குகள் வீதியின் குறுக்கும் மறுக்குமாகச் செல்வதால் விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அண்மையில், யாழ். எரிபொருள் நிலையத்தில் கடமை புரியும் இளைஞர் ஒருவரும் குறித்த வீதியில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் உள்ள சாதாரண கழிவுப் பொருட்களைப் பார்வையிட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொது சுகாதார பரிசோதகர்கள், வீதியோரங்களில் நிலவும் இவ்வாறான ஆபத்தான நிலைமை குறித்துக் கவனம் செலுத்தாதது ஏன் என்ற கேள்வி பொதுமக்களால் எழுப்பப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சீர்கேடான செயற்பாடுகள் குறித்து யாழ். மாநகர சபையினர், மானிப்பாய் பிரதேச சபையினர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply