யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை கடும் சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணங்களைச் செய்தவர் என்றும், அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்த மனைவியின் குழந்தைக்கே இந்தக் கொடுமை இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தையும் தாயும் இணைந்து, அக்குழந்தையின் மீது தொடர்ச்சியாகக் கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் குழந்தையின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அந்தக் காயங்கள் மீது மிளகாய்த்தூள் பூசியும், குழந்தைக்குப் பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்தும் அவர்கள் சித்திரவதை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் நல உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்குச் சென்றபோது, கணவனும் மனைவியும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கும், குழந்தையை மீட்கவும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் பிரதேச செயலக அதிகாரிகளும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
