19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கான மினி ஏலம் இன்று!

19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் இன்றையதினம் (16) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

ஏலப் பட்டியலில் 240 இந்திய வீரர்களும் 110 வெளிநாட்டு வீரர்களும் அடங்கலாக மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தற்போது மேலும் 19 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.

ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 125 கோடி இந்திய ரூபாயை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தக்க வைத்த வீரர்களுக்கான ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் மற்ற வீரர்களை வாங்க முடியும்.

அந்த வகையில் அதிகபட்சமாக முன்னாள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 64.3 கோடி ரூபாய் கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணி 13 வீரர்களை வாங்க வேண்டி உள்ளது.

5 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்சிடம் 43.4 கோடி இருப்பு இருக்கிறது. அவர்களுக்கு 4 வெளிநாட்டவர் உள்பட 9 வீரர்கள் தேவை.

மும்பை இந்தியன்சிடம் குறைந்த தொகையாக 2½ கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. 20 வீரர்களை தக்க வைத்துள்ள அந்த அணி இன்னும் 5 வீரர்களை எடுக்கலாம்.

ஒவ்வொரு அணியிலும் குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம் பெறலாம்.

அவுஸ்திரேலிய சகலதுறை வீரரான கெமரூன் கிரீன், மெக்குர்க், இந்தியாவின் வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், இங்கிலாந்து சகலதுறை வீரரான லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோருக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாகும். இதே போல் மதீச பதிரன (இலங்கை), குயின்டன் டி கொக் (தென்னாப்பிரிக்கா), சையத் முஷ்டாக் அலி கிண்ண போட்டியில் அசத்தும் சர்ப்ராஸ் கான் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

மினி ஏலத்திற்கு என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வகுத்துள்ள புதிய விதிமுறைப்படி வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் கட்டணத்தில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது அதிகபட்ச தக்கவைப்பு தொகை (ரூ.18 கோடி) அல்லது முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏலம் போன வீரரின் தொகை (ரிஷப் பண்ட் ரூ.27 கோடி) இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

எனவே மினி ஏலத்தில் கெமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு மேல் ஏலம் போனாலும் அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தொகை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வீரர்கள் நலநிதிக்கு பயன்படுத்தப்படும்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஏல நிகழ்வு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply