துருக்கி நோக்கி பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இருந்து, துருக்கி, இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம் ஒன்றின் தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று (17) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், செவ்வாய்க்கிழமை (16) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் தரையிறங்கும் கியரில் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க நடவடிக்கை எடுத்தனர்.
விமானமானது அவசரமாகத் தரையிறங்கும் முன் எரிபொருளை எரிப்பதற்காக (Fuel Burn) குறிப்பிட்ட நேரத்தில் வானில் வட்டமடித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையத்தில் தீயணைப்புப் படை மற்றும் மருத்துவ அவசர சிகிச்சைக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமான ஊழியர்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடன் (Air Traffic Control) தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததுடன், நிலையான அவசர கால நெறிமுறைகளைப் பின்பற்றினர்.
அனைத்து அவசர ஏற்பாடுகளுக்கும் மத்தியில், TK 733 விமானம் அதிகாலை 12:28 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
