இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
எத்தால பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் வேலை செய்யாத காரணத்தினால் கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி பொலிஸாரால் சாரதி அனுமதிப்பத்திரம் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதனைத் திரும்ப ஒப்படைக்க பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 3,200 ரூபாய் இலஞ்சம் கோருவதாக, எத்தால பகுதியைச் சேர்ந்த நபர் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் (போக்குவரத்துப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி) கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு இலஞ்சம் கோரியுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் முதலில் 2,200 ரூபாயைக் கோரியிருந்த நிலையில், பின்னர் நேற்று (17) மேலதிகமாக 1,000 ரூபாயைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட், நேற்று மாலை 4.10 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
