அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை அம்பலாங்கொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த இனம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், முகாமையாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் குருந்துவத்த – அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்தநிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும், ஏனைய நால்வர் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் ஆகிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
