முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைதுசெய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (26) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இது குறித்த விசாரணைகளின் பின்னணியிலேயே முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க்கது.
