2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் கொழும்பு நகரை அண்மித்து இன்று (31) விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளைய தினம் (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, இதன்போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு குறிப்பாக கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நாளை இந்தப் பொலிஸ் பிரிவுகளில் போக்குவரத்து வழமை போல் இடம்பெறும் என்பதுடன், கடும் நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் தேவைக்கேற்ப பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறுதல் – என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (எம்.ஓ.டி சந்தி) திரும்பி, பாலதக்ஷ மாவத்தை, மாக்கன் மாக்கர் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்ல முடியும்.
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரை மற்றும் அதற்கு அப்பால் செல்ல முடியும்.
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக பயணித்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதி நோக்கியோ பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி கொழும்பிலிருந்து வெளியேற முடியும். காலி வீதியின் கிளை வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி NSA சுற்றுவட்டம் நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்துத் திட்டத்தின் போது கொழும்பு நகரின் நடைபாதைகளிலோ அல்லது பிரதான வீதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக விசேட வாகன தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு சுமார் 5,900 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் இலவச வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளின் இருபுறங்களிலும் கட்டணம் அறவிடப்படாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவின் பாலதக்ஷ மாவத்தை M.O.D வாகனத் தரிப்பிடம் (பேரே வாவிக்கு அருகில்/நோக்கி)
கொள்ளுப்பிட்டி / பம்பலப்பிட்டி / வெள்ளவத்தை கரையோர வீதிகள்
கோட்டை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் பாசன்ஸ் வீதி வெளியேறும் ஒழுங்கை மட்டும்
காலி வீதி வெள்ளவத்தை சவோய் அருகில் இருந்து காலி வீதி பகத்தலே வீதி சந்தி வரையிலான வாகனத் தரிப்பிடங்களில் மட்டும்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தாமரைத் தடாக சுற்றுவட்டத்திலிருந்து நூலக சுற்றுவட்டம் நோக்கி உள்நுழையும் ஒழுங்கை (இடதுபுறம்)
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் எப். ஆர். சேனாநாயக்க மாவத்தை
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ரீட் மாவத்தை , ரீட் ராஜகாரிய சந்தியிலிருந்து ரீட் தர்ஸ்டன் சந்தி வரையிலான வீதியின் வலதுபுறம்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் சுதந்திர மாவத்தை, சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரையிலான வீதியின் வலதுபுறம்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் மெட்லண்ட் பிரதேசம்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் இலங்கை மன்றக் கல்லூரி வீதி
பின்வரும் வாகனத் தரிப்பிடங்களில் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பொலிஸ் பிரிவின் பஸ்டியன் மாவத்தை பழைய மெனிங் சந்தை வாகனத் தரிப்பிடம்
கோட்டை பொலிஸ் பிரிவின் விமலதர்மசூரிய மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடம்
கோட்டை பொலிஸ் பிரிவின் ராசிக் பரீத் மாவத்தை ஹேமாஸ் வாகனத் தரிப்பிடம்
டி. ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் வாகனத் தரிப்பிடம்
கோட்டை பொலிஸ் பிரிவின் லேடன் பஸ்டியன் வீதி
கோட்டை பொலிஸ் பிரிவின் பிரிஸ்டல் வீதி
கோட்டை பொலிஸ் பிரிவின் டியூக் வீதி
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் யூனியன் பிளேஸ், டோசன் வீதி சந்தி, எக்சஸ் டவர் வாகனத் தரிப்பிடம்
மருதானை பொலிஸ் பிரிவின் காமினி சுற்றுவட்டம் – சென் கிளெமென்ட் வாகனத் தரிப்பிடம்.
