முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விசாரணைகளை மேற்கொள்ள 05 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வரும் போதிலும், அவர் இருக்கும் இடத்தை இதுவரை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையிலேயே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ, நேற்று பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (31) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதே குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply