இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது நேற்று இரவு 11.30 மணியளவில் பொத்துவிலில் இருந்து தென்கிழக்காக சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகிறது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி மேற்கு – வடமேற்குக் திசையினூடாக நகர்ந்து செல்லும். தொடர்ந்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து சக்தி மிக்க தாழ் அமுக்கமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 50 – 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கம் மேலும் தீவிரமடையும் என்பதால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

மன்னார் தொடக்கம் ‌காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 – 45 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 60 – 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி வீசக் கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply