இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் சக்தி மிக்க தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் தீவிரமடைவதுடன் இன்று மாலையளவில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையாக இலங்கையின் கரையை நோக்கி வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 – 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய, மத்திய ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும்.

சக்தி வாய்ந்த தாழமுக்கம் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 km தொலைவில் நிலை கொண்டுள்ளது.

எனவே நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

சிலாபம் தொடக்கம் மன்னார், ‌காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 – 45 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகமானது மணிக்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply