ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதியால் இந்த விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியதுடன் எதிர்வரும் 15ஆம் திகதி தான் வடக்குக்கு வரும்போது இப்பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
