பெரியமுல்ல, ஏத்துக்கால ரயில் கடவைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான ஜீப் வண்டி ஒன்றில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குற்றத்தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நீர்கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் குழுவொன்றினால் பெரியமுல்ல, ஏத்துக்கால ரயில் கடவைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஜீப் வண்டி சோதனையிடப்பட்ட போது அதில் பயணித்த நபர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, 01 கிராம் கொக்கைன் மற்றும் 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, அவர் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து 29 கிராம் 240 மில்லி கிராம் குஷ் போதைப்பொருளும், 02 கிராம் 230 மில்லி கிராம் அடையாளம் காணப்படாத போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபருக்குச் சொந்தமான மருந்தகம் ஒன்றைச் சோதனையிட்டபோது அங்கிருந்து 1,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
