யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடை ஒன்றில் குறித்த பெண் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றி வந்துள்ளார்.
பின்னர் அந்தப்பெண் தனக்கு ஜனவரி 21 ஆம் திகதி திருமணம் என்று கூறி 3 மாதங்களுக்கு முன்னர் பணியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், நகைக் கடையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், குறித்த இளம் பெண்ணை நேற்று கைது செய்துள்ளனர்.
கைதான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும், மீதியை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்படி சான்றுப்பொருள்களை மீட்கும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
