‘டித்வா’ (Ditwa) புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது.
குறித்த பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
‘டித்வா’ (Ditwa) புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை இலங்கை எவ்வாறு கையாண்டுள்ளது என்பதை ஆராய்வதும், உட்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்களை புரிந்துகொள்வதும் இக்குழுவின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
