12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் மூலம் இடம்பெறும் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் கையாள்வதற்காகப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர்கள் தொடர்பான 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.
அவற்றில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் 8,514 முறைப்பாடுகளும், அதன் நேரடி எல்லைக்குள் வராத 1,941 முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.
