இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் உள்ள 41 சிகிச்சை மையங்களில் 4,771 எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களும், 1,469 சிபிலிஸ் நோயாளர்களும் மற்றும் 2,891 ஹெர்பீஸ் நோயாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்துகளில் தற்போது 36,421 மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாகவும், அது நான்கு மாதங்களுக்குப் போதுமானது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே அந்த நோய்களுக்கான மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
