ஆறாவது நாளாகவும் தொடரும் கரைவலை மீனவர்களின் போராட்டம்!

முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.

எனினும் ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது.

குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply