மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை- தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன், சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடைகளை முன்னெடுத்த விவசாயிகள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் பிரதான குளமான உன்னிச்சைகுளத்தின் 3 வான் கதவுகள், 2 அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 104.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 52 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமமம் பகுதியில் 63.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 80 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 39.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply