கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகச் செயற்பாட்டாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்கள் வசம் இருந்த 30 தொலைபேசிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அந்தத் தொலைபேசிகள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
முழுமையான விசாரணையின் பின்னர் இது குறித்த தெளிவான அறிக்கையொன்றை வெளியிடுவோம். தற்போது விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
