தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, எரிவாயுவைச் சேமித்து வைப்பதில் நெருக்கடி காணப்படுவதால் அதற்கான தேவையான தீர்வுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
நாட்டில் அதிகபட்சமாக ஒரு வார காலத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியும் என்பதையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் எரிவாயு மற்றும் எரிபொருளில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனத் தெரிவித்த ஜனாதிபதி, மார்ச் 12ஆம் திகதியளவில் ஒரு இலட்சம் புதிய எரிவாயு சிலிண்டர்களுடன் கப்பல் ஒன்று நாட்டிற்கு வரவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
