சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம்- மூன்று மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களிடம் வாக்குமூலம் சேகரிப்பதற்காக யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் பல்கலைக்கழக பதிவாளர் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் கீழே இறக்கி அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

குறித்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மற்றும் காணொளி காட்சிகள் சகிதம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குறித்த விவகாரம் தொடர்பாக பல்கலைகழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வாக்குமூலம் சேகரிக்க பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளமையால் மாணவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் மாணவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply