அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள சதித் தன்மை குறித்த மேலதிக உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது பதவிக்காலத்தின் போது, முடிவில்லாத போர்களில் அமெரிக்காவை சிக்க வைக்காமல் இராணுவ பலத்தை எவ்வாறு தீர்க்கமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து அவருக்குச் சிறந்த புரிதல் இருந்ததாக கென்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பத்திலேயே உயர் இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் உள்ள செல்வாக்குமிக்க குழுக்கள் இணைந்து மிகவும் நுணுக்கமான முறையில் தவறான தகவல்களைப் பரப்பும் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் மூலம் ட்ரம்ப்பின் ‘அமெரிக்காவிற்கே முதலிடம்’ என்ற கொள்கையை முழுமையாக முடக்கி, ஈரானுடன் ஒரு போரை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை அவர்கள் ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதாகவும், இப்போது தாக்குதல் நடத்தினால் மிக விரைவான வெற்றியைப் பெறலாம் என்றும் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலத்தில் அமெரிக்காவை ஈராக் போரில் சிக்க வைப்பதற்காக இஸ்ரேல் பயன்படுத்திய தந்திரம் என்றும் ஜோ கென்ட் தனது கடிதத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

45 வயதான கென்ட், அமெரிக்க விசேட படையணி மற்றும் சி.ஐ.ஏ ஆகியவற்றின் அனுபவமிக்க அதிகாரி ஆவார். இராணுவ வீராங்கனையான இவரது மனைவி ஷானன் கென்ட், 2019 ஆம் ஆண்டு சிரியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply