இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் (Sergio Gor) இன்றையதினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று முதல் மார்ச் 24ஆம் திகதி வரை அவர் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கான இந்த விஜயத்தின் போது, விசேட பிரதிநிதி நாட்டின் சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்து அமெரிக்க – இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளதுடன், பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
