தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்துப் பேச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதுவித அருகதையும் இல்லை என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை நேற்றைய தினம் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பதவிக்காலத்தின் எஞ்சிய காலப் பகுதியொன்றையே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார்.
ஆகவே, இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்து கருத்து வெளியிட அவருக்கு எந்த அருகதையும் இல்லை.
அது குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாய்திறந்து தனது கருத்தை முன்வைக்க வேண்டும்.
புத்தரின் கேச தாது வைக்கப்பட்ட இடத்தைக் கூட ஜனாதிபதி வெளிச்சவீடாக சித்தரிக்கின்றார்.
ஆனால் அந்த இடம் பௌத்தர்களுக்கு மிகப் புனிதமானதும் முக்கியமானதுமான இடமாகும்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலும் மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக பதவிக்குக் கொண்டு வந்து இதே போன்று தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களை அழிவுக்குள்ளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தடுத்து நிறுத்தவே 69 இலட்சம் மக்களின் வாக்குகள் கொண்டு கோட்டாபயவைப் பதவிக்குக் கொண்டு வந்தோம்.
வடக்கின் பிரிவினைவாதிகளின் வாக்குகளுக்காக தொல்பொருள் முக்கியத்துவம் கொண்ட இடங்களை யாருக்கும் பகிர்ந்தளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.