ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்தவுடன் இலஞ்ச ஊழல் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதுடன், அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களையும் கைப்பற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைவிடுத்துள்ளார்.
மேலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொண்டாலே, நாட்டை பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் செல்வந்த இலங்கையர்களின் உதவிகளைப் பெற்றால் மட்டுமே, இந்தப் பிரச்சினைகளிலிருந்து எம்மால் மீண்டெழ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலீடுகளை செய்வதற்கு பும்பெயர் இலங்கையர்கள் ஆர்வமாகவே உள்ளார்கள்.
எனினும், இங்கு காணப்படும் இலஞ்ச, ஊழல் நடவடிக்கைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுவதால்தான், அவர்களால் நாட்டுக்கு உதவ முடியாமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே முதலில் இந்த கலாசாரத்தை இல்லாது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அறிவு சார்ந்த நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினால் தான் நாம் இன்று நாடு என்ற வகையில் தோல்வியடைந்துள்ளோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நாட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. குறுகிய காலத்தில், இந்தப் பிரச்சினைகளில் இருந்து எம்மால் மீண்டெழ முடியும்.
இதற்காக நாம் சர்வதேசத்திடம் சென்று பிச்சையெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.