கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்த போராட்டம், கோணாவில் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக குறித்த போராடம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 30 ஆம் திகதி கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த கிராமத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுவதாகவும், அதன் காரணமாகவே இன்றைய தினம் இந்த கிராமத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கிராமங்களில் இடம்பெறும் குடும்ப வன்முறைகள், போதைப்பொருள் பாவனை மற்றும் இளவயது திருமணம் என்பவற்றை இல்லாதொழிக்கும் நோக்குடனுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிவரும் காலங்களில் இவ்வாறான குடும்ப வன்முறையோ அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகளோ இடம்பெறக் கூடாது எனவும் அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் அதனைத் தட்டிக் கேட்பதற்கு பலமான பெண்கள் அமைப்புக்களும் இருக்கின்றன.
ஆகவே அந்த அமைப்புக்களூடாக வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும் சமூகத்திலிருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறுவர் மீதும் பெண்கள் மீதும் அதிகளிவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பிரதானமாக, மது போதை பாவனை அதிகரித்துள்ளமையே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.