தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைகள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பட்டிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும் 75 வருடமாக காணப்படும் சரித்திரங்களை புரிந்து கொள்ளாது மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“குருந்தூர் விகாரை கட்டப்பட்டு விகாரையைச் சுற்றி 300 ஏக்கர் வயல் மற்றும் தனியார் காணிகளை இணைத்து வர்த்தமானி மூலம் தொல்பொருள் திணைக்களத்திற்கு பெற்றுக் கொள்ளுதல் தவறு.
குருந்தூர் மலை தமிழ், பௌத்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட இடமெனவும் அவற்றை விடுவிக்க வேண்டுமென கூறப்பட்ட விடயங்களை ஊடகங்கள் பல பெருமெடுப்பில் வரவேற்றுள்ளன.
ஆயினும் எல்லாவல மேதாநந்த தேரர், 300 ஏக்கர் வழங்குதல் தவறான விடயம் எனவும், மக்கள் விகாரையை சுற்றி வசித்தால் அது விகாரையை பாதிக்குமெனவும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், குருந்தூர் மலை அரச காணி எனவும் எவருக்கும் அக்காணி வழங்கப்படாது என ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
குருந்தூர் மலை, பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அதாவது, 1933 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி தொல்பொருள் சின்னமாக அறிவிக்கப்பட்டதுடன் வர்த்தமானியில் குருந்தூர் மலைக் காடு என்ற சொற்பதமே உபயோகிக்கப்பட்டது. 78 ஏக்கரளவிலான பரப்பளவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
அது தவிர்ந்த ஏனைய இடங்களில் மக்கள் விவசாயத்தை மேற்கொண்டு வந்ததுடன் யுத்த காலத்தில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
மீண்டும் மக்கள் காணியில் விவசாயம் மேற்கொள்ள முயன்ற போது அக் காணிகள் வனவளத் திணைக்களத்திற்கு உரியதெனக் கூறி மக்களின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வரலாற்றை ஆய்வு செய்து முடிவெடுக்கப்பட முன்னரே விதுர விக்ரமநாயக்க குருந்தூர் மலையில் புத்தர் சிலையை வைத்த பின்னர் இராணுவ உதவியுடன் விகாரை கட்டப்பட்டது.
மக்களுடைய காணிகளை அபகரித்து அரசாங்கம் விகாரைகள் கட்டும், அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போகின்றனர்.
அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதால் எமது உறுப்பினர்களுக்கு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சிகள் நடைபெறுகின்றன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் உட்பட ஏனைய தரப்புகள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகக் கூடாது என்பதைக் கூறிக்கொள்கின்றோம்.
75 வருடமாக காணப்படும் சரித்திரங்களை புரிந்து கொள்ளாமல் மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் பேசாமல் இயங்குவதில்லை என்பது அறிந்த விடயம்.
இவ்வாறு இருக்கையில் இலங்கையில் நடைபெறும் பௌதமயமாக்கலுக்கு எதிராக இந்தியாவிடம் முறையிடப் போவதாக கூறுவதானது சிரிப்பிற்குரிய விடயம்.
முதலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்பு என்ற ரீதியில் கூட்டமைப்பு இவ்விடயங்கள் தொடர்பில் சரியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க அடுத்த முறை வெல்வதற்கு தமிழ் மக்களின் வாக்கு மிக அவசியமாகும்.
அதனை அடிப்டையாக கொண்டு பேரம் பேசுதல்களில் ஈடுபட வேண்டுமே தவிர பேச்சுவார்த்தைக்கு சென்று விட்டு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று மக்களை ஏமாற்றக் கூடாது.
வட கிழக்கிலுள்ள 18 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாம் இருவரும் தான் இவற்றுக்கெதிராக குரல் கொடுத்து வருகின்றோம்.
அவர்களுக்கு துணை போகும் விதத்தில் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் செயற்பட்டு வரும் நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேசம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சர்வதேசத்தை குறை கூறி பயனில்லை.
எமது போராட்டங்களில் மக்கள் பங்கெடுப்பதில்லை என்று குறை கூறும் ஏனைய தரப்பு இப்பிரச்சினைகளுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வி எழுகின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சட்டத்தரணி என். காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.