இலங்கையில், எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி என தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள கருத்து மோதல், விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய இந்த சூழலில் ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, சர்வதேச நாணய நிதியம் மற்றும், உலக வங்கிகள் என வெளிநாட்டு நிறுவங்கள் இலங்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்க செய்து விடும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனால் நாடு மேலும் சரிவை சந்திக்கும் என்பதனால் விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவாக ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.